ஈரோடு - பள்ளிபாளையம் சிக்கன் பிரியாணி - Erode - Pallipalayam Chicken Biryani
தேவையான பொருட்கள் :
1 சிக்கன் - 1/4 கிலோ
2 பாஸ்மதி அரிசி - 2 கப்
3 வெங்காயம் - 1 பெரியது
4 இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜை கரண்டி
5 புதினா, கொத்தமல்லி - சிறிதளவு
6 பச்சை மிளகாய் - 4
7 தேங்காய் பால் - 2 கப்
பொடித்து கொள்ள :
கசகசா - 1 மேஜை கரண்டி
சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி
பிரியாணி மசாலா தூள் - 1/2 தே.கரண்டி
உப்பு - தேவையான அளவு
முதலில் தாளிக்க :
எண்ணெய் - 2 மேஜை கரண்டி
பட்டை, கிராம்பு - 1 , ஏலக்காய் - 1
பிரியாணி இலை - 1
இந்த சிக்கன் பிரியாணியில், காரத்திற்கு வெரும் பச்சை மிளகாய் மட்டுமே சேர்க்க வேண்டும். மிளகாய் தூள் சேர்க்க கூடாது. அதனால் அவரவர் காரத்திற்கு ஏற்ப பச்சை மிளகாயினை சேர்த்து கொள்ளவும்.
இதில் கசகசாவினை பொடித்து சேர்க்கவும். இந்த பிரியாணியில் தக்காளி, தயிர், எலுமிச்சை சாறு எதுவும் சேர்க்க தேவையில்லை.
தேங்காய் பால் சேர்த்து செய்வதால் கூடுதல் சுவையுடன் இருக்கும். 1 கப் அரிசி என்றால 1/2 கப் - 1 கப் தேங்காய் பால் சேர்த்து கொள்ளலாம். தேங்காய் பாலினை அதிகம் சேர்க்க வேண்டாம். அதே மாதிரி தேங்காய் பால் சேர்க்காமல் செய்தால் நன்றாக தான் இருக்கும். ஆனால் கண்டிப்பாக கசகசா சேர்க்கவும்.
செய்முறை :
வெங்காயத்தினை நீளமான மெல்லிய துண்டுகளாக வெட்டி வைக்கவும். பச்சை மிளகாயினை இரண்டாக கீறி கொள்ளவும்.
பாஸ்மதி அரிசியினை தண்ணீரில் ஊறவைத்து கொள்ளவும். கசகசாவினை மிக்ஸியில் போட்டு மைய பொடித்து வைக்கவும்.
சிக்கனை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும். சிக்கனை பிரியாணி மசாலா + மஞ்சள் தூள் சேர்த்து 5 - 10 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும்.
பிரஸர் குக்கரில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்து கொள்ளவும். இத்துடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் சிறிது வதங்கியதும், அத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அத்துடன் பச்சை மிளகாய் + புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்,
ஊறவைத்த சிக்கனை இத்துடன் சேர்த்து நன்றாக கிளறி வேகவிடவும்.
சிக்கன் பாதி வெந்த பிறகு அத்துடன் பொடித்த கசகசா சேர்த்து வதக்கவும்.
அத்துடன் ஊற வைத்த அரிசி + தேங்காய் பால் + தேவையான அளவு உப்பு +1 1/2 கப் - 2 கப் தண்ணீர் சேர்த்து கலந்து 1 விசில் வரும் வரை மிதமான தீயில் வேகவிடவும்.
பிரஸர் குக்கரில் விசில் அடங்கியதும் பிரியாணியில் 1 தே.கரண்டி நெய் சேர்த்து ஒரு முறை பக்குவமாக கிளறிவிடவும்.
சுவையான பிரியாணி ரெடி. இதனை தயிர் பச்சடி, முட்டை, கத்திரிக்காய் மசாலா சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.